குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்த விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் ஜெயந்த் சின்ஹா

0
0

குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து கவுரவித்த விவகாரத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி இறைச்சி வியாபாரி அலிமுதீன் அன்சாரியை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது. மாட்டிறைச்சியை அந்த வியாபாரி காரில் கடத்தியதாக எழுந்த சந்தேகம் இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரிகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், பாஜக பிரமுகர் நித்யானந்த் மஹதோ உட்பட 11 பேருக்கு கடந்த மார்ச் மாதம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த 8 பேரும் கடந்த 3-ம் தேதி ஹசாரிபாக் நகரில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டுக்கு சென்று சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்ததுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவும் இதைக் கண்டித்தார்.

இந்த விவகாரம் பூதாகாரமாக உருவானதையடுத்து இந்த விஷயம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே இதுகுறித்து பேச முடியாது என்று நான் பலமுறை கூறிவிட்டேன். எனவே இதுபற்றி பேசுவது சிறந்ததாக இருக்காது. இந்த விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். கொலை வழக்கில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தர நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு நான் மாலை அணிவித்ததையடுத்து நான் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கருதினால் எனது செயலுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா கூறினார்.