குர்னல் பாண்டியா, சாஹரை ‘ரேகிங்’ செய்த மூத்த வீரர்கள்: வைரலாகும் வீடியோ

0
0

 இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள குர்னல் பாண்டியா, தீபக் சாஹரை மூத்த வீரர்கள் ரேகிங் செய்தும், நாற்காலியில் ஏறி நிற்கவைத்து கேள்விகள் கேட்டும் கிண்டல் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாட 3 மாத பயணமாக அந்நாட்டுக்கு இந்திய அணி சென்றுள்ளது. இதில் அயர்லாந்துடனான போட்டியின் போது காயமடைந்த பும்ராவுக்குப் பதிலாக தீபக் சாஹரும், காயமடைந்த மற்றொரு வீரர் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக குர்னல் பாண்டியாவும் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ராகுலின் அற்புதமான சதம், குல்தீப் யாதவின் மாயாஜாலப் பந்துவீச்சு ஆகியவற்றால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்று முன்னணியில் இருக்கிறது.

அந்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் இந்திய வீரர்கள் அணியில் புதிதாக இணைந்த வீரர்கள் குர்னல் பாண்டியா, தீபக் சாஹரை ஹோட்டலில் ரேகிங் செய்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் குர்னல் பாண்டியா, சாஹரை நாற்காலியில் ஏறி நிற்கவைத்து வீரர்கள் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் அளிக்குமாறு அமைந்துள்ளது. உங்களுடைய பெயர் என்ன, இந்திய அணியில் இணைந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள், நாட்டுக்காக விளையாடுவது குறித்து உங்களின் கருத்து என்ன என்று வீரர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு மிகவும் அடக்கமான பையனாக, கால்களை நேராக வைத்துக்கொண்டு, சாஹர் பதில் அளித்தார். ”நான் ஆக்ராவில் இருந்து வருகிறேன். ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சியில் விளையாடி இருக்கிறேன். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். உங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடுவது வித்தியாசமான அனுபவம்” எனத் தெரிவித்தார்.

குர்னல் பாண்டியா நாற்காலியில் ஏறியவுடன் அனைவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அவரிடமும் இதே கேள்விகள் கேட்கப்படுகின்றன. ”என்னுடைய பெயர் குர்னல் பாண்டியா, குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்துவருகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவது எனக்கு மிகப்பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

இதைக் கேட்டு அனைத்து வீரர்களும் சிரித்து மகிழ்கிறார்கள். நாற்காலியில் அமர்ந்து இதை ரசித்துப் பார்த்த பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் சிரித்து மகிழ்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூத்த வீரர்கள் கேட்கும் கேள்விக்கு குர்னல் பாண்டியா பதில் அளித்த காட்சி