‘குருவி முட்டைகளை உடைத்ததால் சாமிக்குத்தம்’ – கிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித் சிறுமி

0
9

‘குருவி முட்டைகளை உடைத்ததால் சாமிக்குத்தம் ஏற்பட்டதாக கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை 10 நாட்கள் கிராமத்தை விட்டு ஒதுக்கி  வைத்த  சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானில் பண்டி மாவட்டத்தில் நடைபெற்ற இச்ம்பவத்தில் 5 வயது தலித் பெண் குழந்தை தள்ளிவைக்கப்பட்டதால் அச்சிறுமி சரியான உணவு, பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை இழந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உதவிகளின்றி வாடிய சிறுமியின் விவகாரம் மாநில குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் தலைவர் மனான் சதுர்வேதியின் தெரியவந்த பிறகு நடவடிக்கை மேற்கொண்டார். அவரின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு போலீஸில் பதிவு செய்யப்பட்டது.

முதன்முதலாக பள்ளி சென்ற அக்குழந்தை, பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் கூடுகட்டியிருந்த ஊர்க்குருவிக் கூட்டில் முட்டைகள் இருப்பது தெரியாமல் ஏறி குருவி கூடு அழகாக இருக்கிறதே என அதை தொட்டுப் பார்த்துள்ளார்.

அச்சமயம் அதில் இருந்த முட்டைகள் கீழே விழுந்து உடைந்தன. உண்மையில் அதற்குள் முட்டைகள் பொதிந்திருந்ததை குழந்தை  கவனிக்கவில்லை.

ஆனால் இச்செய்தி ஊர்முழுக்க பரவியது. பஞ்சாயத்தும் கூடியது. உள்ளூர் நாட்டாமைகள் தீர்ப்பை வழங்கினர். ஆரம்பமாக மூன்று நாட்கள் அதன்பின்னர் அடுத்த எட்டு நாட்கள் என அக்குழந்தை கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

சில உள்ளூர் சமுதாயத் தலைவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, இப் பெண் தனது வீட்டிற்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டது. தெரு முற்றத்திலேயே விடப்பட்டார். அவளது கர்ப்பிணி தாயால் சிறிது தூர இடைவெளியோடு சிறுமியின் தட்டிற்கு ரொட்டித்துண்டு வீசப்பட்டது.

கிராமத்து மூடநம்பிக்கை

ஊர்க்குருவிகளின் முட்டைகளை உடைத்தது ஊருக்கு கெட்ட சகுனம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் ஊரில் இனி மழை பெய்யாது என்றும் அவர்களது கிராமத்து மக்களின் நம்பிக்கையின்படி முடிவுக்கு வந்துள்ளனர்.

இதற்குக் காரணமான சிறிமியிடம் யாரும் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டது. உணவு உள்ளிட்ட எந்த ஆகாரமும் யாரும் தரக்கூடாது என்று ஒதுக்கிவைக்கப்பட்ட நிலை ஏற்பட்டது.

இதனால் அவரது குடும்பத்தினர் மனம் வருந்தினர். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 10 நாட்களும் அவர்கள் நரக வேதனையை அனுபவித்தனர். இதற்கு மாற்று வழிகளே இல்லையா என ஏங்கினர். இவ்விவகாரம் முடிவுக்கு வர அவர்கள் மாற்றுவழிகளை தெரிவித்துள்ளனர்.

விலை உயர்ந்த ஒயின்

மேலும் அப்படி ஒதுக்கிவைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமானால் விலையுயர்ந்த ஒயின் மற்றும் பலவிதமான தின்பண்டங்கள், இது தவிர மாட்டுக்குத் தீவனங்கள், மீன் உணவு சமைக்கத் தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்கி வந்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளது முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தை வட்டாட்சியரிடம் வந்து கிராமத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ள தன் பெண்ணின் நிலையை எடுத்துக்கூறி ஆதரவு கோரினார். அதன்பிறகே இப்பிரச்சனை வெளியுலகுக்கு தெரியவந்தது.

தாசில்தார் உள்ளிட்ட உயரதிகாரிகள் போலீஸ் துணையோடு கிராமத்திற்கு விரைந்தனர். சமுதாய உறுப்பினர்களை எச்சரிக்கை செய்தனர்.

குடும்பம் வெளியேற உத்தரவு

பெண்ணின் தந்தை அதிகாரிகளிடம் புகார் அளித்தது உள்ளூர் சமூதாயத் தலைவருக்கு கடும் கோபத்தை உண்டுபண்ணியது. இதனால் அக்குடும்பத்தையே வாழ்நாள் முழுவதும் ஊரைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்தார்.

ராஜஸ்தான் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சதுர்வேதி இவ்விவகாரத்தை கையில் எடுத்தார். நேற்று காலை கிராமத்திற்கு நேரடியாக சென்று நிலைமையை நேரில் பார்த்தார். அவர்களிடம் பேசினார். கிராமத்திற்கு யாரோ ஒரு பெண்மணி வந்திருக்கிறார் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். அவர் அங்கிருந்தே உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

10 பேர் கைது

கிராமத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். ஹின்டோலி காவல் நிலையத்தில் காவல் நிலைய அதிகாரி 10 பேர் மீது நேற்று மதியம் 1.29 மணிக்கு இவ்வழக்கை பதிவு செய்தார். 10 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

சிறார் நீதி சட்டம் மற்றும் தீண்டாமை சட்டம் ஆகியவையின்கீழ் அக்கிராமத்தைச் சேர்ந்த அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளுக்கு உத்தரவு

இதில் ஒரு நல்ல மாற்றம், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மனான் சதுவேர்வேதியின் தலையீட்டுக்குப் பிறகு அக்குடும்பத்தில் புதிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளது

பாதிக்கப்பட்ட தலித் குழந்தையின் வீட்டுக்கு இலவச கேஸ் கனெக்ஷன், 2 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் மொத்தமாக வழங்கவும், உடனடியாக வீட்டிற்கு மின்சார இணைப்புக்கும் பாதுகாப்பு உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும், மற்றும் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான உதவித்தொகை வழங்கவும் ஓரிரு நாட்களில் இந்த அடிப்படை வசதிகள் தொடர்புடைய துறைகள் நடைமுறைப்படுத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.