குமாரசாமிக்கு காங்கிரஸ் நெருக்கடி: பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க கோரிக்கை

0
0

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் குமாரசாமி புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்ய முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதை அடுத்து குமாரசாமி கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.1.5 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நட‌ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது தினேஷ் குண்டுராவ் பேசும்போது, “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி உயர்வு மக்களை பாதிக்கும். எனவே அதனை முதல்வர் குமாரசாமி திரும்பப் பெற வேண்டும். அமைச்சரவையில் காலி இடங்களை நிரப்ப வேண்டும்” என்றார். இதன் மூலம் குமாரசாமிக்கு காங்கிரஸ் நெருக்கடி தருவதாக மஜத குற்றம் சாட்டி உள்ளது.