குப்பைகளை வகை பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையாளர்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

0
0

சென்னையில் 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்களை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 17 லட்சத்து 10 ஆயிரத்து 817 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் சராசரியாக 5,249 டன் குப்பைகள் உருவாகின்றன. இதில் 4 சதவீதம் (199.58 டன்) மட்டுமே அறிவியல் முறையில் இயற்கை உரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள குப்பைகள், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரக் கேடுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதில் அனைத்து உள்ளாட்சிகளும் குப்பைகளை வீடுகளில் இருந்து பெறும்போதே மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்துப் பெற வேண்டும்.

இந்தக் குப்பைகளில் உகந்தவற்றை மறுசுழற்சிக்கு, இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இனி பொதுமக்கள் குப்பைகளை வகை பிரித்துத்தான் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை பொதுமக்கள் யாரும் கடைபிடிக்கவில்லை.

இதற்கிடையில் வரைவு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. அதில் விதிகளை மீறி குப்பையை உருவாக்குவோர், குப்பைகளை வகை பிரிக்காமல் வழங்குவோருக்கு அபராதம் விதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

100-வது இடத்துக்கு உயர்வு

கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநகராட்சி நிர்வாகம் 235-வது இடத்திலிருந்து 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு தேசிய அளவில் சென்னை மாநகராட்சி சிறப்பான இடத்தைப் பிடிக்க அதிகாரிகள், பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் விளைவாக ஐஏஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சிறு தெருக்களிலும் ஸ்கூட்டர்களில் சென்று துப்புரவு பணிகளை ஆய்வு செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் தலா ஒரு பரப்புரையாளர் நியமிக்கப்பட்டு, குப்பைகளை வகை பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா இயக்கம்

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் இந்த பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்து வழங்குவதை உறுதி செய்வதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கழிப்பிட வசதியுள்ள, வசதி இல்லாத வீடுகள், அதற்கான காரணங்கள், கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடுவது தொடர்பான விவரங்களை சேகரித்து மாநகராட்சிக்கு வழங்குவர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.