கிம்மைச் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்: ட்ரம்ப்

0
0

வடகொரிய அதிபர் கிம் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விரைவில் அவரைக் காணும் நாளை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட பதிவில்,  “நீங்கள் கூறிய வார்த்தைகளின்படி நடந்து  கொள்வதற்கு நன்றி. உங்களது நடவடிக்கைகள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. உங்களது அன்பான கடிதத்துக்கு நன்றி. விரைவில் உங்களைச் சந்திக்கும் நாளை எதிர்நோக்கி உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்ப்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.

இது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப் போலச் செயல்படுவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. மேலும் உயர்நிலைப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் நிபந்தனைகள் பிரச்சினைக்குரியதாக உள்ளதாக வடகொரியா கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மீண்டும் மோதல் உருவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் இந்த ட்விட்டர் பதிவு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

எனினும் கிம் அனுப்பிய கடித்ததின் முழு விவரத்தை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.