காஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை- இரும்புக் கதவை கார் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்

0
0

ஜம்மு காஷ்மீர் மாநில  முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டு இரும்புக் கதவை கார் மூலம் உடைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா ஆகியோரின் வீடு ஜம்மு புறநகர் பகுதியில் பதின்டி என்ற இடத்தில் உள்ளது. தோட்டம் மற்றும் புல்வெளியுடன் கூடிய இந்த வீட்டுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் இவர்களின் வீடு நோக்கி காரில் வந்த ஓர் இளைஞர், திடீரென வீட்டு இரும்பு நுழைவுக் கதவு மீது மோதி அதை உடைத்தார். பின்னர் தோட்டத்தை கடந்து வீடு வரை காரை கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். இதையடுத்து காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், ஹாலில் இருந்த கண்ணாடி மேஜை, சுவரில் தொடங்கிய படங்களை உடைத்து விட்டு, மாடிக்குச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிஆர்பிஎப் வீர்ர்கள், உடனே சுதாரித்துக் கொண்டு, துப்பாக்கி யால் சுட்டு அந்த இளைஞரை எச்சரித்தனர். எனினும் அவர், தனது கண்ணில் தென்படும் பொருட்களை எல்லாம் உடைத்துவிட்டு மாடிக்குச் செல்ல முயன்றதால் அவரை சுட்டு வீழ்த்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பரூக் அப்துல்லா, உமர் அப் துல்லா ஆகிய இருவரும் இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒருவர் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர் தொகுதி எம்.பி.யான பரூக் அப்துல்லா, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி யில் தங்கியுள்ளார். இச்சம்பவம் பற்றிஅறிந்தவுடன் அவர் ஜம்மு விரைந்தார். அவர் கூறும் போது, “இது மிகவும் துரதிருஷ்டவசமானது. கொல்லப்பட்ட இளைஞரின் நோக்கம் குறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே கொல்லப்பட்டவர் சயீத் முர்பாத் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டம், மெந்தார் தாலுகா, குல்தாட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் ஜம்முவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள் கூறும்போது, “முர்பாத்ஷா வழக்கம் போல் ‘ஜிம்’முக்கு சென்றான். அவன் எப்படி பரூக் அப்துல்லா வீட்டுக்குச் சென்றான் எனத் தெரியவில்லை. அவனிடம் எந்தவொரு ஆயுதமோ, வெடிபொருளோ இல்லை. அவனை கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.

ஜம்மு எஸ்எஸ்பி விவேக் குப்தா கூறும்போது, “அந்த இளைஞர் பலமுறை எச்சரித்தும் நிற்கவில்லை. அவருடன் ஏற்பட்ட கைகலப்பில் போலீஸ் காவலர் ஒருவர் காயமடைந்தார்” என்றார்.

மாநில டிஜிபி எஸ்.பி. வைத் கூறும்போது,“வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞரின் நோக்கத்தை கண்டறிய முயன்று வருகிறோம்.  இத்தனை பாதுகாப்பையும் மீறி அவர் நுழைந்தது குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றார்.