காஷ்மீர் தரும் அபாய எச்சரிக்கை: ஆறு மாதங்களில் தீவிரவாத அமைப்புகளில் இணைந்த 82 இளைஞர்கள்

0
0

 காஷ்மீரில் கடந்த ஆறு மாதங்களில் தீவிரவாத அமைப்புகளில் 82 இளைஞர்கள் இணைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது பாதுகாப்பு அமைப்புகளுக்கு காஷ்மீர் தரும் அபாய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பல தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கை இருந்து வருகிறது. தற்போது இங்கு சுமார் 250 தீவிரவாதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள், மத்திய பாதுகாப்பு முகாம்கள் மீது அவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் அவை அம்மாநில இளைஞர்களிடம் பேசி தம் அமைப்பில் சேர்ப்பது அதிகமாகி உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினர் அதிகமான இளைஞர்களை சேர்த்து வருகின்றனர். லஷகர்- இ -தொய்பா மற்றும் ஜெய்ஷ் -இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களும் காஷ்மீர் இளைஞர்களை தம் பக்கம் இழுக்கின்றனர்.

தீவிரவாத அமைப்புகளில் கடந்த வருடம் 2017-ல் மொத்தம் 128 பேர் இணைந்ததாகக் மத்திய உளவுத்துறையின் புள்ளிவிவரத்தில் தெரிகிறது. 2018-ல் இதுவரை 82 பேர் தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இது அடுத்த ஐந்து மாதங்களில் நூறையும் தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதனால், ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகும் வாய்ப்புகள் உள்ளன. இதை முறியடிக்கும் வகையில் அம்மாநிலத்தில் அமர்த்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பு படைகள் தம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இது குறித்து’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் வட்டாரம் கூறும்போது, ‘இவற்றில் பல்கலைகழகம், கல்லூரிகள் என நன்கு படித்த இளைஞர்கள் இணைவது புதிய விஷயமாக உள்ளது. சுமார் 25 பேர் ஏப்ரலில், மே மாதத்தில் 15, ஜூனில் 20 என்ற எண்ணிக்கையில் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர்.

எங்கள் படைகளால் அதிகமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதும், அவர்களுக்கான இறுதி ஊர்வலங்களும் இதற்கு காரணம் ஆகும். புதிதாக தீவிரவாதப் பாதைக்கு வருபவர்கள் முறையானப் பயிற்சி பெற முடியாமல் அதிகபட்சமாக ஆறு மாதங்களில் கொல்லப்பட்டு விடுகின்றனர்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதக்களில் சுமார் 101 தீவிரவாதிகள் மத்திய பாதுகாப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் மட்டுமே வெளிநாட்டவர். மற்ற அனைவரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். ஏப்ரல் 1-ம் தேதி மட்டும் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான இறுதி ஊர்வலத்தில் ஏராளமான காஷ்மீரிகள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற சமயங்களில் இடப்படும் ஆவேசமான கோஷங்களும், பேச்சுக்களும் புதிய இளைஞர்களை தவறானப் பாதைகளுக்கு கவர்ந்து விடுகிறது. இதன் மீதான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஸ்ரீநகர் வந்த போது நடைபெற்றது. இதில் அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா, மத்திய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.