காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0
0

காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று இரவிலிருந்து நடைபெற்று வரும் இச்சண்டையில் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியில் இருந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் இன்று காலை சோபியன் மாவட்டத்தில் கில்லோரா கிராமத்தில் நடைபெற்ற சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் உடல் அவர் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த உமர் மாலிக் என்று அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்தவரிடமிருந்து ஏகே 47 துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

நீண்ட நாள் கழித்து நேற்று முன்தினத்திலிருந்து காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து மட்டும் இதுவரை 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது உடல் மட்டும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.