காஷ்மீரில் கொல்லப்பட்ட மத்திய பிரதேச ஜவானுக்கு முழு ராணுவ மரியாதை

0
0

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஜவானின் உடல் இன்று மத்தியப் பிரதேசத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கடந்தவாரம் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் குப்வாரா மாவட்ட எல்லையில் நடைபெற்ற சண்டையில், ராஷ்டிரிய ரிப்லெஸ் (ஆர்ஆர்) பிரிவைச் சேர்ந்த ஜவான் ரஞ்சித் சிங் தோமர் (28) கொல்லப்பட்டார். இவர் மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

ஜவானின் சொந்த கிராமத்தில் இன்று அவருக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. மறைந்த ஜவானுக்கு ஏராளமான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இதில் டாட்டியா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மத்திய பிரதேச மாநில பொது உறவுகள் மற்றும் நீராதார அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கலந்துகொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். முழு ராணுவ மரியாதையோடு ஜவானின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சிவராஜ் சிங் சவுகான் மறைந்த ராணுவ வீரருக்கு உதவித்தொகையாக ரூ.1 கோடி அறிவித்துள்ளார். மற்றும் மறைந்த ஜவானின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

ராணுவ வீரரின் சிலை அவரது சொந்தகிராமத்தில் அமைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.