காவிரியில் 38 ஆயிரம் கன அடி நீர் வரத்து: 75 அடியை கடந்து உயரும் மேட்டூர் அணை நீர் மட்டம்

0
0

சேலம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 38 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், அணை நீர் மட்டம் 75 அடியை கடந்து உயர்ந்து வருகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை காரணமாக கர்நாடகாவில் கபினி அணை முழு கொள்ளவை எட்டி, உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை நீர் வரத்து விநாடிக்கு 34,231 கன அடியாக இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 38,916 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர் மட்டம் வியாழக்கிழமை 71.76 அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நான்கு அடி நீர் மட்டம் உயர்ந்து 75.36 அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 37.48 டிஎம்சி-யாக உள்ளது. காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அணை நீர் மட்டம் 100 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. மேலும், இம்மாத இறுதியில் டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட கூடும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.