காலா வில்லனை பற்றி தெரியுமா

0
52

சினிமாக்களில் ஹீரோ பிரபலமானதை விட கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் ஏகப்பிரபலம் ஆகிவிடுவது உண்டு, ஹீரோ தான் இறுதியில் ஜெயிப்பார் என்றாலும் நடுவில் இருவருக்குமான போட்டி சுவாரஸ்யமானதாக அல்லது மக்கள் விரும்பும்படியாக அமைந்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே சொல்லிவிடலாம். ஒரு படத்தின் ஹீரோ வெயிட்டான கதாப்பாத்திரமாக இருப்பார். அந்தக் கதையின் வில்லன் என்று அறிமுகப்படுத்தப்படுவபர் ஹீரோவை விட ஒரு படி மேலே காட்டவேண்டும். அப்போது தானே….

தன்னை விட வலிமையான ஒருவனுடன் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்பதை மக்களுக்கு புரியவைக்க முடியும். நம் சினிமாக்களில் இப்படி மக்கள் மனதில் தனி இடம் பிடித்த ஏராளமான வில்லன்களை பார்த்திருப்போம். அப்படிப்பட்ட கொண்டாடப்பட்ட நெகட்டிவ் கேரக்டர்களில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானா படேகர். இவர் ஏரளமான ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

#1

70களின் பிற்பகுதியில் தான் நானா படேகர் பாலிவுட்டிற்கு வருகிறார். கிடைத்த வாய்ப்பினை எல்லாம் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு தன் திறமையை நிரூபித்தார் நானா படேகர். திரைப்படங்களில் நடித்த உயர்ந்த அந்தஸ்த்திற்கு சென்றாலும் இன்னமும் மிக எளிமையான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஹீரோ தான் கோடிகளில் சம்பளம் வாங்கி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்று ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர். இவரது நடிப்புத் திறமைக்கும், மக்கள் மத்தியில் நானா படேகருக்கு இருந்த வரவேற்பினையும் பார்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் அவருக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்க முன் வந்தார்கள்.

#2

நானா படேகரின் நடிப்பு வெகுவாக புகழப்பட்டது பரீண்டா என்ற திரைப்படம். அதில் மாபியா கும்பல் டானாக நடித்திருப்பார். அதன் க்ளைமேக்ஸ் காட்சியின் போது நெருப்பில் சிக்கிக் கொள்வது போல இருந்தது. அதை படமாக்கப்பட்ட போது எந்த டூப்பும் இல்லாமல் தானே நடித்தார். எதிர்பாராத விதமாக நானா படேகருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை படுத்த படுக்கையில் கிடந்தார் நானா படேகர்!

#3

நானா படேகர் கடுமையான கோபக்காரர்… யாராக இருந்தாலும் அவர் செய்த தவறை சுட்டிக் காட்ட,விமர்சனம் செய்ய நானா தயங்கியதே இல்லை. அக்னி சாக்‌ஷி மற்றும் கமோஷி ஆகிய இரண்டு ஹிட் திரைப்படங்களில் நானாவுடன் சேர்ந்து நடித்தவர் மனீஷா கொய்ராலா. அப்போது இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நானாவின் கோபத்தால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று பின்னர் சொல்லப்பட்டது.

#4

நானா படேகர் எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே மூன்று ஆண்டுகள் வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார் நானா. பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய ராணுவத்தின் கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

#5

நானாவுடன் பிறந்தவர்களை விட நானா கொஞ்சம் கருப்பாக இருப்பாராம். இளவயதில் தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய விரும்பியிருக்கிறார். ஆனால் நானாவின் நிறத்தை காரணம் காட்டி அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம். அதோடு தன்னை விட வெள்ளையாக இருந்த நானாவின் மூத்த சகோதரரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் நானாவை பெரிதும் பாதித்திருக்கிறது. தன்னுடைய நிறத்தை நினைத்து நீண்ட நாட்கள் தாழ்வு மனப்பான்மையில் திரிந்தாராம் நானா.

#6

நானாவின் குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருந்திருக்கவில்லை. அப்பாவுடன் இணைந்து தொழில் செய்து வந்தவர் ஒரு நாள் மொத்தமாக சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடிக்க மொத்த குடும்பமும் அதனால் பெரிதும் அவதிப்பட்டிருக்கிறார்கள். நானா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே வேலைக்குச் சென்று வீட்டிற்கு சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது திரைப்பட போஸ்டர்களை எல்லாம் பெயிண்ட் அடிக்க, ஒட்டுவாராம்.

#7

நானாவின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர்.இவர் மஹாராஸ்டிராவில் உள்ள முருட் என்ற ஊரில் பிறந்தார். அப்பா டெக்ஸ்டைல் வியாபாரம் செய்ய இவரை கவனித்துக் கொள்ள வேண்டியது முழுவதும் அம்மாவின் வேலை. மற்ற குழந்தைகளை விட நானாவை பார்த்துக் கொள்வது தான் பெரிய வேலையாக இருக்குமாம். ஏனென்றால் சிறுவயதில் நானா நிறைய சேட்டைகளைச் செய்வாராம். ஒரு கணம் அவரை கவனிக்க மறந்தால் கூட எதாவது வேலை இழுத்து வைத்திருப்பாராம்.

#8

பிறந்த ஊரிலிருந்து மும்பைக்கு வந்ததும் அவர்களின் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. அன்றாட வயிற்றுப் பிழைப்பை ஓட்டுவதே பெரும் சவாலாய் இருந்தது. சாலையில் ஜீப்ரா க்ராசிங் எல்லாம் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து சம்பாதித்து வீட்டிற்கு கொடுப்பாராம் நானா.

#9

தன் வாழ்க்கையில் ஏகப்பட்ட வலியை சந்தித்ததாலோ என்னவோ பிறர் கஷ்டப்படுவதை பார்க்கும் போதெல்லாம் துடிப்பவர் அவருக்கு உதவி செய்ய உடனேயே களத்தில் இறங்கிவிடுவாராம். இயல்பிலேயே நானா மிகவும் இளகிய மனம் படைத்தவர். சில வருடங்களுக்கு முன்னர மஹாராஸ்டிரா மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தது. விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்போது பிரபலங்கள் பலரும் வருத்தம் ஏற்பட்டதாக கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க நானா, ‘நாம்’ என்ற அமைப்பை உருவாக்கி பணத்தை சேகரித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தார்.

#10

விவசாயிகள் மட்டுமல்லாது விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.மக்களிடம் நடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பதவியும் கிடைத்து மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார் நானா. பணம், புகழ் உச்சத்திற்கே சென்றாலும் இன்னமும் மும்பையில் தன் இளைமையில் வாழ்ந்த அதே ஒரு பெட்ரூம் கொண்ட அப்பார்ட்மெண்ட் வீட்டில் தான் நானா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

#11

1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு பரோல் வழங்கப்பட்டது. இதன் போது நானா சொன்ன கருத்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்போது நானா என்ன சொன்னார் தெரியுமா? திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் நான் சஞ்செய் தத்துடன் நடித்ததில்லை. நிச்சயமாக இனி எதிர்காலத்திலும் சஞ்செய் தத்துடன் நடிக்கமாட்டேன் என்றார்.