கார் விபத்து வழக்கில் நடிகர் துருவ் விக்ரம் கைது: 3 ஆட்டோக்கள் சேதம்; ஒருவர் படுகாயம்

0
1

 

கார் விபத்து வழக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாகச் சென்ற TN 07 CL 9494 என்ற பலேனோ கார் காவல் ஆணையர் இல்லம் அருகே வந்தபோது சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது வேகமாக மோதியது. இதனால் அடுத்தடுத்து மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்த விபத்தால் காமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேதமடைந்த ஆட்டோ.

 

காரில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தன் நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பயணித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. துருவ்வின் காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறையினர் துருவ் மற்றும் அவரது நண்பர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

பிறகு, துருவ் விக்ரம் மீது அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் துருவ் விக்ரம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.