‘‘கான் சாஹிப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்’’ – இம்ரான் அழைப்பை ஏற்றார் சித்து

0
0

என் மீது மிகுந்த மரியாதை வைத்து இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார், பாகிஸ்தான் பிரதமராக அவர் பதவியேற்கும் விழாவில் நான் கலந்து கொள்வேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவஜோத்சிங் சித்து கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.

இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.

சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல், இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்தி திரைப்பட நடிகரான அமீர்கானுக்கும் பிடிஐ கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மிகச்சிறந்த மனிதர். நல்ல குணம் படைத்தவர். அரசியல் விருப்பு வெறுப்புகளை தாண்டி அனைவரிடமும் பழக்கூடியவர். அவரது பண்புகள் நம்பத் தகுந்தவை. இருநாடுகளிடையேயான உறவு எப்படி இருந்தாலும், என் மீது மிகுந்த மரியாதை வைத்த அவர் அழைப்பு விடுத்துள்ளார். எனவே பாகிஸ்தான் பிரதமராக கான்சாஹிப் பதவியேற்கும் விழாவில் நான் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன்’’ எனக் கூறினார்.