காத்திருந்து சாதனை படைத்த கோலி: தோனி புதிய மைல்கல்; இன்னும் சுவாரஸ்ய தகவல்கள்

0
0

 ஓல்டுடிராபோர்டு நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது, டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதில் கேப்டன் விராட் கோலியும், தோனியும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.

 

160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. அதிரடியாக ஆடிய கே.எல் ராகுல் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, தோனி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அதன்விவரம் வருமாறு.

மிக விரைவாக 2 ஆயிரம் ரன்கள்.

இந்தப் போட்டியில் விராட் கோலி 8 ரன்கள் சேர்த்தபோது, டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் சேர்த்த 4-வது வீரர் எனும் பெருமையையும், குறைந்த போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

இதற்கு முன் நியூசிலாந்து வீரர்கள் கப்தில், மெக்கலம், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் மட்டுமே 2 ஆயிரம் ரன்கள் அடித்திருந்த நிலையில், 4-வது வீரராக விராட் கோலி இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல், மிகக் குறைந்த அளவில் 56 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றார்.

விராட் கோலி 2 ஆயிரம் ரன்களை எட்ட 17 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அவர் நினைத்திருந்தால், அயர்லாந்துடனான போட்டியில் அதை அடித்து சாதனை செய்திருக்கலாம். ஆனால், கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் அந்த சாதனையைச் செய்ய வேண்டும் என்று காத்திருந்ததுபோல் விராட் கோலியின் 2 ஆயிரம் ரன்கள் சாதனை அமைந்துவிட்டது.

அதிகமான ஸ்டெம்பிங்

 

இந்த போட்டியில் 2 ஸ்டெம்பிங்குகளை தோனி செய்ததன் மூலம், டி20 போட்டியில் அதிகமான ஸ்டெம்பிங் செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் 32 ஸ்டெம்பிங் செய்து முதலிடத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஷேசாத் 28 ஸ்டெம்பிங் செய்து இப்போது 3-வது இடத்திலும், வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் 26 ஸ்டெம்பிங் செய்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய புள்ளிவிவரங்கள்…

1. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டி20 போட்டியில் பெறும் முதலாவது வெற்றியாகும். இதற்குமுன் 4 முறை முயன்றும் தோல்வியில் முடிந்தது. இரு அணிகளும் தலா 2-2 என்ற சமநிலையில் உள்ளனர்.

2. டி20 போட்டியில் சதம் அடித்ததன் டி20 போட்யில் சதம் அடித்த வீரர்களில் 9-வது வீரராக கே.எல். ராகுல் இணைந்தார். டி20 போட்டியில் ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாகச் சதம் அடித்த 2-வது வீரராக ராகுல் திகழ்கிறார். கோலின் முன்ரோ மட்டுமே 3 சதங்கள் அடித்துள்ளார்.

3. டி20 போட்டியில் இதுவரை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை 22 பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ளனர். இதில் குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்தி வீரர் குல்தீப் யாதவ் ஆவார். இதற்கு முன் புவனேஷ் குமார், யஜுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

4. டி 20 போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த 4-வது இங்கிலாந்து வீரர் ஜோஸ்பட்லர் (1,199). இதற்கு முன் கெவின் பீட்டர்ஸன் (1,176), மோர்கன் (1700), ஹேல்ஸ் (1,513) ஆகியோர் அடித்துள்ளனர்.

5. இந்தியா- இங்கிலாந்து டி20 போட்டியில் ராகுல் அடித்த 101 ரன்களே எந்தப் போட்டியிலும் ஒரு வீரர் அடித்த அதிகபட்சமாகும். இதற்கு முன் மோர்கன் அடித்த 71 ரன்களை ராகுல் முறியடித்துவிட்டார்.

6. இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில், ராகுல், ரோகித் கூட்டணி 123 ரன்கள் சேர்த்ததே 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன், 2007 டி20 உலகக்கோப்பையில், சேவாக், கம்பீர், கூட்டணி 136 ரன்கள் சேர்த்திருந்தது.