காதலியை ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வீடு புகுந்து திருட்டு: சினிமா துணை நடிகர் நண்பருடன் கைது

0
0

தனது காதலியை ஆடம்பரமாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பணத்தேவைக்காக சென்னையில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருடிய சினிமா துணை நடிகர் நண்பருடன் சிக்கினார்.

சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நகை, பணம் திருட்டு போவதாக அதிக அளவில் புகார்கள் வந்தன. இதன் பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் குறித்த முக்கியமான துப்பு கிடைத்தது. திருடர்கள் ஒரு வீட்டில் திருடிய செல்போனில் உள்ள சிம்கார்டைத் தூக்கி எறிந்துவிட்டு அதில் தங்களது சிம்கார்டைப் பயன்படுத்தி வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த செல்போன் எண்ணை போலீஸார் ட்ரேஸ் செய்தனர்.

அந்த செல்போன் எண்ணை சேலையூர், பவானி நகரைச் சேர்ந்த ரவி என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சினிமாவிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் துணை நடிகர் என்பது தெரியவந்தது.

தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், திரைத்துறையில் இருக்கும் தனக்கு நடக்கும் திருமணம் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தனது காதலியை ஆடம்பரமாக திருமணம் செய்வதற்காக நினைத்ததாகவும் ரவி கூறியுள்ளார்.

அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்பதால் ஒரே வழி திருடுவதுதான் என்று முடிவு செய்து பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திட்டமிட்டு சிக்கிகொள்ளாதபடி தனது நண்பருடன் சேர்ந்து திருடியதாக ரவி கூறினார். அவர் அளித்த தகவலின்பேரில் அவரது கூட்டாளியான பம்மலைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள் என்ற கண்ணனையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 42 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.