காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள இரட்டை திருமாளிகையை புதுப்பிப்பதில் முறைகேடு: வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

0
0

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலைப் புதுப்பிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகார் மீது, சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.

காஞ்சியில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டை திருமாளிகை உள்ளது. 2 அடுக்குகளைக் கொண்ட மாளிகை போன்று இருப்பதால் இது இரட்டை திருமாளிகை எனப் பெயர் பெற்றது. கல் தூண்கள் மூலம் கட்டப்பட்ட திருமாளிகை தூண்களில் கலை நயம் மிக்க சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

இந்த இரட்டை திருமாளிகை பழுது அடைந்ததைத் தொடர்ந்து, புதுப்பிப்பதற்காக 2014-ல் தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இம்மாளிகையின் மேல் பகுதியை சீரமைக்க ரூ.79.90 லட்சமும், கீழ்பகுதி மாளிகையை சீரமைக்க ரூ.65 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இச்சீரமைப்புப் பணிகள் தொடங்கபட்டு, இதுவரை 30 சதவீத பணிகள் மட்டுமே நிறை வடைந்துள்ளன.

இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயிலின் பக்த ரான டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் இரட்டை திருமாளிகை புதுப்பிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா உட்பட 6 பேர் மீது புகார் அளித்தார்.

திருமாளிகையில் இருந்து அகற்றப்பட்ட பழைய தூண்கள் மாயமாகிவிட்டன என்றும், எத்தனை பழைய தூண்கள் அகற்றப்பட்டுள்ளன? மாற்றாக எத்தனை புதிய தூண்கள் போடப்பட உள் ளன என்பது தொடர்பான விவரங்கள் சீரமைப்பு மதிப்பீட்டில் இல்லை, மேலும் கோயிலை புதுப்பிப்பதில் விதிமீறல் இருப்பதாகவும் புகாரில் டில்லிபாபு கூறியிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் மன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நடுவர் மீனாட்சி, இந்தப் புகார் தொடர்பாக சிவகாஞ்சி போலீ ஸார் கூடுதல் திருப்பணி ஆணை யர் கவிதா, வேலூர் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் வீ.பாலசுப்பிரமணி, மாமல்லபுரம் ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.