கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து: துருவ் விக்ரம் தரப்பு விளக்கம்

0
0

துருவ்வின் கார் விபத்துக்குள்ளானது கவனக்குறைவால் மட்டுமே என்று துருவ் விக்ரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் துருவ். இவர் நடிகர் விக்ரமின் மகன்.

சென்னையில் துருவ் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை விபத்துக்குள்ளானது. இதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்தது மட்டுமன்றி, ஆட்டோ ஒட்டுநர் ஒருவரும் படுகாயமடைந்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துருவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக துருவ் விக்ரம் தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று விட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார். இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.