கள்ள நோட்டு அச்சடித்த கேரள டி.வி. நடிகை கைது

0
0

வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த கேரள சின்னத்திரை நடிகை சூர்யா, அவரது தாய், சகோதரியை போலீஸார் கைது செய்தனர்.

கேரளாவின் பிரபல சின்னத்திரை நடிகை சூர்யா. பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கள்ள நோட்டு அச்சடித்ததாக இவரையும் இவரது குடும்பத்தினரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று மேலும் இருவரை கைது செய்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கொல்லம் இன்ஸ்பெக்டர் வி.எஸ்.சுனில்குமார் நேற்று கூறியதாவது:

சூர்யாவின் வீட்டில் ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகள், இதை அச்சடிப்பதற்கான தாள்கள், பிரின்டர்களை கைப்பற்றியுள்ளோம். இடுக்கியில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பல் அளித்த தகவலின்படி சூர்யாவும் அவரது குடும்பத்தினரும் சிக்கினர். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கள்ள நோட்டு அச்சடித்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய இதை செய்துள்ளனர். போலி சாமியார் ஒருவருடன் ஏற்பட்ட சந்திப்பை தொடர்ந்து சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.