கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் அழைப்பு விடுத்த வழக்கு: 6 மாதத்துக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றவும், விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி போராசிரியை நிர்மலாதேவியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நிர்மலாதேவிக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மனு அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து கருப்புசாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவிக்கும் கருப்பசாமிக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களையும், இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்களையும் சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அவருக்கு ஜாமீன் வழங்கவும் சிபிசிஐடி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

“மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான குற்றமாகும். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது.

இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். இதனால் இந்த வழக்கை செப்டம்பர் 24-க்குள் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். செப்டம்பர் 10-ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும். அதுவரை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.