கலைஞரின் வசனத்தை பேசி தொண்டையில் ரத்தம் வந்தது.. விஜயகுமாரி | Actress Vijaykumari about Poompuhar!

0
0

சென்னை: கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தை பேசியதால் தொண்டையில் இரத்தம் வந்ததாக நடிகை விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படங்களில் பூம்புகார் முக்கியமான திரைப்படம். சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை கற்ற பண்டிதர்களைத் தாண்டி கண்ணகியின் தூய்மையையும், வீரத்தையும் பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்த்த திரைப்படம் பூம்புகார்.

இத்திரைப்படத்தில் கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கண்ணகியாக சி.ஆர்.விஜயகுமாரியும் நடித்திருந்தனர். பாண்டிய நாட்டு ராணியின் கால் சிலம்பை கோவலன் திருடிவிட்டான் என நினைத்து அவன் கொலைசெய்யப்பட்டதற்கு பிறகு நடக்கும் காட்சிகள் முக்கியமானவை.

தன் கணவன் கோவலன், கொலைசெய்யப்பட்டான் என்ற தகவலறிந்து நெடுஞ்செழியப்பாண்டியனின் அரசவையில் தலைவிரிக் கோலம் பூண்டு, கோவலன் குற்றமற்றவன் என கண்ணகி நிரூபிக்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் உடல் சிலிர்க்கும்.

கலைஞரின் அந்த வசனத்தை பேசி நடிக்க விஜயகுமாரிக்கு பயமாக இருந்ததாம். இயக்குனர் நீலகண்டனிடம், கலைஞருக்கு முன்னால் எப்படி இந்த நீளமான வசனத்தை பேசுவதென்று தெரியவில்லை. அவர் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். உடனே துண்டை தோளில் போட்டுக்கொண்டு வேகமாக அருகில் வந்த கலைஞர், என்னம்மா நான் இருக்கிறது பிரச்சனையா? வெளில போய்டவா எனக் கேட்டாராம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை என சமாளித்திருக்கிறார் விஜயகுமாரி. பிறகு கண்ணகியாக நடிக்கிறாய், பயப்படக்கூடாது என தைரியமூட்டியிருக்கிறார் கலைஞர்.

மிகத் தத்ரூபமாக வரவேண்டும் என்று அர்ப்பணிப்போடு சத்தம்போட்டு வசனம் பேசியதில் காட்சி படமாக்கப்பட்ட பிறகு தொண்டையில் ரத்தம் வரும் அளவுக்கு புண்ணாகி விட்டதாம் விஜயகுமாரிக்கு.

அன்று கலைஞரின் வசனத்திற்காக ரத்தம் சிந்தி நடித்ததன் பிரதிபலனாக, எப்படி சிவபெருமான் என்றாலும், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும் சிவாஜிகணேசன் ஞாபகத்திற்கு வருவாரோ அவ்வாறே கண்ணகி என்றால் விஜயகுமாரி ஞாபகத்திற்கு வருகிறார்.