கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க டாக்டர், செவிலியர் மட்டுமே தகுதி பெற்றவர்கள்: தகுதியில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை உத்தரவு

0
0

கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க எம்பிபிஎஸ் படித்த டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கர்ப்பிணிகளுக்கு பேறுகால கவனிப்பு வழங்க எம்பிபிஎஸ் படித்த டாக்டர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதிப் பெற்றவர்கள்.

மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வது மட்டுமே தாய் மற்றும் சேயின் நலத்துக்கு பாதுகாப்பானது. தமிழகத்தில் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நிகழ்கின்றன. இதில், 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டோ, திரைப்படங்களைப் பார்த்துவிட்டோ பிரசவம் பார்க்கலாம் என்பது அறிவார்ந்த செயல் அல்ல.

கர்ப்பிணியின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியது என எச்சரிக்கப்படுகிறது. கணவனையும், குடும்பத்தாரையும் சார்ந்திருக்கும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை தேவைப்படும்போது அறியாமையாலோ அல்லது வேறு காரணங்களினாலோ மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றமாகும்.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 82-ன்படி தாய்சேய் நலத்தை மேம்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்படி குற்றம்

தாய்சேய் நலன் காக்கும் கடமையை நிறைவேற்றவிடாமல் அரசு டாக்டரையோ, கிராம மற்றும் நகர்ப்புற செவிலியர்களையோ, பிற அலுவலர்களையோ கடமையாற்ற விடாமல் தடுப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102, 104 மற்றும் பொது சுகாதாரத் துறையின் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 044-24350496, 044-24334811, 9444340496 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

கண்காணிக்க வேண்டும்

மேலும் 24 மணி நேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்சேய் நல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எல்லா பிரசவங்களும்  மருத்துவமனைகளில் நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட துணை இயக்குநர்கள் கண்காணிக்க வேண்டும்.

இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தகுதி இல்லாத நபர்கள் பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.