கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறப்பு

0
0

கர்நாடகாவிலும், கேரளாவிலும் தொடர்ந்து கன‌ மழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணை கள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமா வதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை மாதமே நிரம்பின.

கர்நாடக அணைக‌ளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1. 20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டதால், மேட்டூர் அணை கடந்த மாதம் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்து வருகிறது. இதே போல கேரள மாநிலம் வய நாட்டில் இரவு பகலாக பலத்த மழை பெய்து வருவதால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்த தால், நிகழாண்டில் இரண்டாம் முறையாக இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. காவிரி, கபினி ஆகிய இரு ஆறுகளிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகள் வழியாகவும் நீரை வெளியேற்றி வருகின்றனர். காவிரி கரையோரமுள்ள 50-க்கும் மேற்பட்டுள்ள கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளதால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ள‌து. அணைக்கு விநாடிக்கு 49 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 76 ஆயிரத்து 900 கனஅடி நீர் வெளியேற்ற‌ப்பட்டது. கபினி அணைக்கு விநாடிக்கு 80 ஆயிரத்து 380 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீண்ட காலத்துக்கு பிறகு காவிரி ஆறு தனது நிஜமான எல்லைகளை தொட்டுக்கொண்டு பாய்கிறது. இதனால் பிலிகுண்டுலு, ஓகேனேக்கல் வனப்பகுதி முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளது.