கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழகத்தை சேர்ந்த 9 குழந்தை உட்பட 11 பேர் மீட்பு: பண்ணையின் உரிமையாளர் கைது

0
0

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம், கனகபுராவை அடுத்துள்ள மர்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் தாசப்பா (52). இவருடைய பண்ணையில் 11 பேர் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டிருப்பதாக ‘இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு கடந்த வாரம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் களப் பணியாளர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையை சேர்ந்தவர் மாதப்பன் (45). இவரது மனைவி கெஞ்சம்மா (36) மற்றும் 9 குழந்தைகளை கடந்த 2014-ம் ஆண்டு தாசப்பாவிடம் வேலை செய்ய ஒப்பந்தத்தின் பேரில் தரகர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், மாதப்பனுக்கு குறைந்த பணத்தைக் கொடுத்து அவரது குடும்பத்தினரிடம் இரவு பகல் பாராமல் வேலை வாங்கியுள்ளது தெரிந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தி 11 பேரையும் மீட்டனர். தலா ரூ.20 ஆயிரம் அளித்து, மீட்புச் சான்றிதழ் அளித்து கடந்த புதன்கிழமை சொந்த ஊரான தேன்கனிக்கோட்டைக்கு அனுப்பிவைத்தனர். தாசப்பா கைது செய்யப்பட்டார்.