கர்நாடகாவில் இருந்து அதிகஅளவு தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

0
0

கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,334 கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை 32,284 கனஅடியாக அதிகரித்தது. அதேபோல் செவ்வாய்க்கிழமை 65.15 அடியாக இருந்த நீர்மட்டம் புதன்கிழமை காலை ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 68.42 அடியானது. நீர் இருப்பு 31.36 டிஎம்சி-யானது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 34,426 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 71.36 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.