கரைபுரண்டு ஓடும் காவிரி; வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்; வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்

0
0

மேட்டூர் அணையில் இருந்து அதிகஅளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை ஏராளமானோர் கூடி வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், கடந்த 23-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. அதன் பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், மேட்டூர் அணை யின் நீர்மட்டமும் 117 அடியாகக் குறைந்தது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நேற்று மதியம் 1 மணியளவில் இந்த ஆண்டில் 2-ம் முறையாக 120 அடியை எட்டியது. விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இதனால் காவிரி நீர் செல்லும் நீலகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை அருகே உள்ள தங்கமாபுரி பட்டணத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் உள்ள கலைமகள் வீதி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம், பள்ளி பாளையத்திலும், காவிரிக் கரையோரத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பாக இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.