கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்: இலங்கை பிரதமர் ரணில் விருப்பம்

0
0

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என திருமலையில் நேற்று சுவாமி தரிசனம் செய்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது குடும்பத் தினருடன் வியாழக்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். அருக்கு ஆந்திர மாநில அமைச்சர் சுஜய் கிருஷ்ணா ரங்காராவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து திருமலையில் உள்ள விடுதியில் ரணில் இரவு தங்கினார்.

நேற்று காலையில் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ரணிலை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர். பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் ரணில் தம்பதிக்கு தீர்த்த பிரசாதங்களும் ஏழுமலையானின் திருவுருப் படமும் வழங்கி கவுரவித்தனர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே ரணில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நான் ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் கண்டிப் பாக திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். எனக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுத்த இந்திய அரசுக்கும், சிறப்பான தரிசன ஏற்பாடு செய்த திருப்பதி தேவஸ்தானத்திற்கும், எனக்காக ஓர் அமைச்சரை நியமனம் செய்த ஆந்திர அரசுக்கும் மிகவும் நன்றி. தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி விரைவில் குணமடைய வேண் டும்.

அவரது உடல்நலம் குறித்து நான் ஏற்கெனவே திமுக செயல்தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் பேசினேன். இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினை விரைவில் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை இலங்கை ஆதரிக்கும்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

ஆந்திர அமைச்சர் சுஜய் கிருஷ்ணா ரங்காராவ், தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு, திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் சிலரும் அப்போது உடனிருந்தனர்.