கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மு.க. முத்து

0
0

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து இன்று முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கடந்த 8-ம் தேதி இரவு 7 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் இரவு பகல் பாராது ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மேடை கிரானைட் கற்கள், டைல்ஸ் கற்களால் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது, பழங்கள், அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர்வளையம், மலர் மாலைகள், பூக்கள், பழங்கள், தேங்காய், வாழைப் பழங்களை கொண்டு வரும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து இன்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து ஆவார்.

எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்த காலங்களில், மு.க. முத்துவும் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் வெளியே எங்கும் செல்லாமல் இருந்தார். தற்போது அவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.