கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்காட்லாந்து தம்பதி: மூத்த தலைவருக்கு மரியாதை செலுத்த வந்ததாக பேட்டி

0
1

 திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்திவரும் வேளையில் வெளிநாட்டு தம்பதி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

தமிழகத்தின் மிக மூத்த தலைவர், 74 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர், 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக நீடித்தவர், 5 முறை முதல்வராகப் பதவி வகித்தவர் கருணாநிதி. மூத்த பத்திரிகையாளர், நாடக, திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இலக்கியவாதி என பல துறைகளில் முத்திரை படைத்தவர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். 8-ம் தேதி மாலை அவரது உடல் மெரினா கடறகரையில் அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர் அடக்கம் செய்யப்பட்ட அன்று வெளிநாட்டு பத்திரிகைகள் அனைத்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செய்தி வெளியிட்டன. தமிழக நாடாளுமன்ற வரலாற்றில் எம்.பி.யாக இல்லாத ஒருவருக்காக இரு அவைகளும் அஞ்சலி செலுத்தி ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறை.

அடக்கம் செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் இரவு பகல் பாராது ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின் றனர்.

நேற்று திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழகம் தாண்டி வெளிநாட்டு தம்பதி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது. நினைவிடத்துக்கு வந்த அவர்கள் முழங்காலிட்டு வணங்கினர். பின்னர் அங்கிருந்த திமுகவினரிடம் பூக்களை வாங்கி சமாதியில் தூவி தங்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களான அந்தத் தம்பதி கருணாநிதியைப் பற்றி கேள்விப்பட்டு அஞ்சலி செலுத்த வந்ததாகவும், மூத்த தலைவருக்கு நாங்கள் செய்யும் மரியாதை இது என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வு திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.