கருணாநிதி உடல்நிலை; நேரில் விசாரித்தார் சிவகார்த்திகேயன்

0
0

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் வந்து விசாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் 31-ம் தேதி இரவு 8.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தார்.

நேற்று காலை 10 மணிக்கு நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை, நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையின் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தார்.

நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவரை ஸ்டாலின் வரவேற்றார். பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அஜித் விசாரித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது.

இந்நிலையில் இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஸ்டாலின், கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.