கருணாநிதி இறுதி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி சிக்கிய விவகாரம்; எஸ்பிஜி, ஐபி அறிக்கை அனுப்பியது

0
0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி கூட்ட நெரிசலில் எவ்வித பாதுகாப்பும் இன்றி 30 நிமிடங்களுக்கு மேல் இருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1991-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில், ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியாவில் 2014 வரை ஒரு கட்சி ஆட்சி முறை அமையவில்லை. காங்கிரஸ் குடும்பத்தில் இருந்த இளம் தலைவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் சோனியாவின் வழிகாட்டுதலில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. தற்போது மிகக் குறைந்த வயதில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் முன்னேறியுள்ளார். ராஜீவ் மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தார் குறிப்பாக ராகுல் காந்திக்கு எஸ்பிஜி எனப்படும் பிரதமருக்கு அளிக்கப்படும் உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் எந்நேரமும் உண்டு. திமுக தலைவர் மறைவை ஒட்டி சென்னையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். விவிஐபிக்கள், விஐபிக்களும் குவிந்தனர்.

அப்படி வந்தவர்களில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு உண்டு. பிரதமர் வரும்வரை கடும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அவர் வந்து சென்றவுடன் அதே அளவு பாதுகாப்பு உள்ள ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.

உயிர் அச்சுறுத்தல் உள்ள தலைவர், அடுத்த பிரதமராக வரும் வாய்ப்புள்ள தலைவர் முப்பது நிமிடங்களுக்கு மேல் கூட்ட நெரிசலில் சிக்கி எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்ததும், பின்னர் கூட்டத்திலிருந்து மீட்கப்பட்டு சென்றதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அளவில் பிரச்சினை வெடித்துள்ளது.

மத்திய உளவு அமைப்பான ஐபி இது குறித்து அறிக்கை அனுப்பியுள்ளது, ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவும் அறிக்கையை அனுப்பிவிட்டது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் காவல் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளனர். எஸ்பிஜியும் இதே போன்றதொரு அறிக்கையை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைபாடும், கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தது, 20 பேர் வரை காயமடைந்தது குறித்து தலைமைச்செயலாளர் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.