கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு – இந்து தமிழ் திசை

0
0

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வுவெடுத்து வருகிறார். அவரை குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். தந்தை கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 1 மணி நேரம் வீட்டில் இருந்த அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய அழகிரி, ‘‘எனது தாய், தந்தையரை சந்திப்பதற்காகவே வந்தேன். நான் சென்றபோது கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்தார். அவர் நலமுடன் இருக்கிறார். இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை’’ என்றார்.

மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்குடன் வலம் வந்த மு.க.அழகிரிக்கும், அவரது சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2014 மார்ச் 25-ம் தேதி கட்சியில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அதன்பிறகு அரசியல் பேசாமல் அமைதியாக இருந்த அழகிரி கடந்த 2 ஆண்டுகளாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு மதுரை பாலமேடு அருகே தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் பேசிய அழகிரி, ‘‘செயல்படாத தலைவர் ஒருவர் சென்னையில் இருக்கிறார். செயல்படும் செயல் வீரர்கள் இங்கு உள்ளனர்’’ என்றார்.

ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் அழகிரியின் பேச்சு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம் மீண்டும் அரசியலில் இறங்க அழகிரி தயாராகி விட்டாரா என்ற பேச்சும் எழுந்தது. இந்நிலையில் மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கருணாநிதியை அவர் சந்தித்திருப்பது குறிப்பிடத் தக்கது.