கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு; தீவிரக் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை: திருநாவுக்கரசர் தகவல்

0
0

 திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின்பு அவரது உடல் நலம் சீரானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நலம் கடந்த 29 ஆம் தேதி மீண்டும் பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு பின்னர் அவர் உடல் நிலை சீரானது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இப்போது தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். நல்லபடியாக மீண்டு வர வேண்டும் எனக் கடவுளை பிரார்த்திப்போம். அவருக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து தெரியாது.

மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்ததில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. அதைத்தான் இப்போது என்னால் சொல்ல முடியும். அவர்களின் குடும்பத்தில் ஒருவர் என்ற முறையிலும் கருணாநிதி மீது அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருப்பவன் என்ற முறையிலும் தினமும் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகிறேன். அவர் உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்போம்” என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.