“கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது” – கமல்ஹாசன் கோரிக்கை

0
0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரான கருணாநிதி, கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார். அவருடைய உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சேம.நாராயணன், ‘அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கருணாநிதி பல நலத்திட்டங்களைச் செய்துள்ளார். எனவே, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். 5 முறை முதல்வராக இருந்து சென்னையில் 10க்கும் மேற்பட்ட மேம்பாலங்களைத் திறந்து வைத்துள்ளார். அதில், ஒரு மேம்பாலத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அப்படி விருதை மனமுவந்து கொடுத்தால் தமிழர்களுக்குப் பெருமை. பிறர் வலியுறுத்தி கொடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.