கயத்தாறிலிருந்து வெளி மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரம் செல்ல ரூ.2,600 கோடியில் வழித்தடம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

0
0

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து கரூர் வழியாக வெளி மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரம் கொண்டு செல்ல ரூ.2,600 கோடியில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

2016 தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார். இன்றைக்கு அவர் இல்லாவிட்டாலும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் 3 ஆண்டுகாலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் மக்களை சந்திப்பது சரியாக இருக்காது.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதை 2024 தேர்தலின்போது அதிமுக ஏற்றுக்கொள்ளும்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் இருந்து கரூர் வழியாக வெளிமாநிலங்களுக்கு சுமார் ரூ.2,600 கோடி செலவில் காற்றாலை மின்சாரம் வழித்தடம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலை தூத்துக்குடியில் விரைவில் அமையவுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் விரைவில் தூத்துக்குடியில் செயல்படுத்தப்படும்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.