கதுவா பலாத்கார வழக்கில் கைதிகளை பஞ்சாப் சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
0

கதுவா பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்ட சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டம், ரசானா என்ற கிராமத்தில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி ஒருவர், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக கதுவா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஏப்ரலில் விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் இந்த வழக்கை பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றவும் வழக்கை தினந்தோறும் விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை கதுவா சிறையிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்ட சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் 8 வாரங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞருக்கு முறையே பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதிக்கப்படுவதை ஜம்மு காஷ்மீர் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. – பிடிஐ