கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கிறேன்! – சீனுராமசாமி நேர்காணல்

0
0

 

ன்னைச் சுற்றிய வாழ்க்கையைக் கவனித்துக்கொண்டே இருப்பவன் நான். அதிலிருந்து எனக்கான திரைக்கதையை எழுதும்போது, நினைத்த மாதிரியே அப்படம் அமைந்துவிடும்போது உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி பூக்கும். அந்த மாதிரிதான் தற்போது ‘கண்ணே கலைமானே’ அமைந்துவிட்டது. கடந்த சில வாரங்களாக நண்பர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கூடத்தில்தான் என் நாட்கள் நகர்கின்றன. ஏறக்குறைய பாதிப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்துவிட்டார். பாடல்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன’’ யுவனின் கம்போஸிங் அறைக்கு வெளியே அமர்ந்து தனது புதிய படம் குறித்துப் பேசத் தொடங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி…

இந்தப் படம் வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?

மதுரைக்கு அருகே உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளை ‘யானைகட்டி போரடித்த மண்’ என்று சொல்வார்கள். அந்தக் களத்தை இந்தமுறை எடுத்துக்கொண்டேன். படத்தில் கமலக்கண்ணனான உதயநிதியும் பாரதியாக தமன்னாவும் வாழ்ந்திருக்கிறார்கள். மதுரை விவசாயக் கல்லூரியில் படித்துவிட்டுச் சொந்த ஊரில் மண்புழு உர உற்பத்திப் பண்ணை நடத்தும் இளைஞனாக உதயநிதி. கிராம மேம்பாட்டு வங்கியின் மேலாளராக தமன்னா.

உதயநிதியை ஒரு தயாரிப்பாளராக ஏற்கெனவே ‘நீர்ப்பறவை’ படத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளர், நடிகராக வந்திருக்கிறார். இரண்டு விஷயங்களிலுமே நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார். நல்ல மனிதர். அதேமாதிரிதான் தமன்னா கதாபாத்திரமும் அற்புதமாக அமைந்துவிட்டது. அவரும் அவ்வளவு பொறுப்போடு நடித்துக்கொடுத்திருக்கிறார். இவர்களோடு ‘பூ’ ராம், வடிவுக்கரசி எனப் பல மண் மணக்கும் கதாபாத்திரங்கள். இது விவசாயப் பிரச்சினையைப் பேசும் படமல்ல. குடும்ப உறவுகளைப் பேசும் களம். கூட்டுக்குடும்பத்தின் உன்னதம், மனிதநேயம் என நாம் மறந்துவரும் உணர்வுகளை வலியுறுத்துகிற படமாக இருக்கும். அதற்குள் விவசாயத்தின் முக்கியத்துவம் அழுத்தமான, நெகிழ்வான களப் பின்னணியாக இருக்கும்.

கிராமிய வாழ்க்கை சார்ந்த கதை என்று வரும்போது அதில் விழிப்புணர்வுப் பிரச்சார நெடி படர்ந்து விடுமே?

என்னுடைய படங்கள் போதிப்பதில்லை. நான் எப்போதும் போதனை செய்கிறவனாக என்னை நினைப்பதுமில்லை. மக்களின் வாழ்க்கையைப் படமாக்க வேண்டும் என விரும்புபவன். குச்சி எடுத்துக்கொண்டு மாணவர்களை மிரட்டும் ஆசிரியராக என்னை எந்தக் காலகட்டத்திலுமே பார்க்க முடியாது. அந்த மாதிரியான படங்கள் எடுப்பதில் என் கவனம் எப்போதும் செல்லாது. எப்படி இதற்கு முந்தைய படமான ‘தர்மதுரை’யில் யதார்த்த வாழ்வைக் காட்டி கவனத்தை ஈர்த்தோமோ அந்த மாதிரிதான் இந்தப் படைப்பு வழியே அதே நெகிழ்வை, பரவசத்தை வாழ்வோடு பிரதிபலிக்கச் செய்திருக்கிறேன்.

‘கண்ணே கலைமானே’ படத்தை கவியரசு கண்ணதாசனுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறீர்களே?

‘பூங்காற்று புதிரானது’, ‘கண்ணே கலைமானே’ இரண்டு பாடல்களையும்தான் வீட்டில் இருக்கும்போது என் மகள்களிடம் அதிகம் பாடிக் காட்டிக்கொண்டே இருப்பேன். இந்த இரண்டு பாடல்களும் என் மனதுக்கு நெருக்கமான பாடல்கள். என் குருநாதர் பாலுமகேந்திரா, கவியரசு கண்ணதாசன், இசைஞானி இளையராஜா மூவரையும் என் ஆசான்களாக நினைக்கிறேன்.

அதில் என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கு ‘தர்மதுரை’ படத்தைச் சமர்ப்பணம் செய்தேன். இளையராஜா இசையில் ‘மூன்றாம் பிறை’ படத்துக்காக கண்ணதாசன் வரிகளில் உருவான அவரது கடைசிப் பாடலின் முதல் இரண்டு வார்த்தைகள்தான் ‘கண்ணே கலைமானே’. அதுதான் படத்துக்கான தலைப்பு. அவருக்கு இப்படத்தைச் சமர்ப்பிப்பது மிகப் பெரும் மகிழ்ச்சி.

தேசிய விருது இயக்குநர், ஆறு படங்களைக் கடந்துவிட்டீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வொரு படத்தையும் முதல்படம்போல் பார்ப்பது என் இயல்பாகிவிட்டது. சினிமாவை நாளுக்குநாள் நேசித்துக்கொண்டே செல்வதால் அப்படி உணர்கிறேன். மற்றபடி தேசிய விருது, பட எண்ணிக்கை இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரிவதில்லை. எல்லா வேலைகளையும்போல என் வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறேன்.

உங்கள் படங்களில் பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை மட்டுமே களமாக்கி வருகிறீர்களே ஏன்?

இதுவரை நான் யோசித்த, பேனா பிடித்து எழுதத் தொடங்கிய அத்தனை திரைக்கதைகளும் அந்தப் பகுதியை வைத்து எழுதியதால் அப்படித் தோன்றலாம். நான் வாழ்ந்த பகுதிகள், பார்க்கும் மனிதர்கள், பேச்சு வழக்கு இதெல்லாம் என்னை அந்தப் பகுதியை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. கண்டிப்பாக இதில் மாற்றம் இருக்கும். விரைவில் அது நடக்கும்.

‘மாமனிதன்’ படத்தின் பணிகள் எந்தக் கட்டத்தில் உள்ளன?

விஜய்சேதுபதியும் நானும் இணையும் புதிய படம். திரைக்கதைப் புத்தகம் தயாராக இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எடுத்துப் படிக்க வேண்டும். ‘கண்ணே கலைமானே’ பணிகள் முடியட்டும் எனக் காத்திருக்கிறேன். இது மதுரையில் தொடங்கும் படம். அங்கே இருந்து பயணம் எங்கே செல்கிறது என்பதுதான் கதை.