“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

0
0

கடவுள் ராமர் வந்தால்கூட நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பைரியா மாவட்டத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங். மாநிலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலத்கார குற்றங்கள் குறித்து சுரேந்திர நாராயண்சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், கடவுள் ராமர் வந்தால் கூட, நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது. பலாத்காரம் என்பது இயற்கை மாசாக மாறிவிட்டது, இதில் யாரும் புனிதமடைய முடியாது.

மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல், சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என சுரேந்தர் சிங் தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல் முறையல்ல இதற்கு முன்பல முறை இதுபோல் பேசி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அரசு ஊழியர்களைக் காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள். அரசு ஊழியர்கள் பணம் பெற்றாலும் வேலை செய்வதில்லை என கடந்த மாதம் தெரிவித்தார்.

உன்னவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து அவரை சீதாபூர் சிறையில் சுரேந்தர் சிங் சென்று சந்தித்து வந்தார்.

அப்போது சுரேந்தர் சிங் பேசுகையில், “ நான் மனிதனின் உளவியல் ரீதியாகப் பேசுகிறேன். யாரும் 3 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்ய மாட்டார்கள். அது சாத்தியமில்லை. குல்தீப் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுகிறது ” எனத் தெரிவித்திருந்தார்.