கடல் அட்டைகளை அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் இருந்து நீக்க மக்களவையில் அன்வர் ராஜா வலியுறுத்தல்

0
0

கடல் அட்டைகளை அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. அக்கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதி எம்பியான அன்வர் ராஜா இந்த கோரிக்கையை மக்களவையின் முன்வைத்தார்

இது குறித்து அன்வர் ராஜா விதி எண் 377-ன் கீழ் பேசியதாவது இந்தியாவில் தமிழகத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடலில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இவற்றில் கடல் அட்டைகளும் ஒன்றாகும். கடல் அட்டைகள் நட்சத்திரமீன் வகையைச் சேர்ந்த மூளையில்லா கடல் வாழ் உயிரினம்.

இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆழ்கடல் பகுதிகளில் கடல் அட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஒரு ஒரு கடல் அட்டை ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் முட்டைகளை இடுகிறது. மேலும் சராசரியாக ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் கடல் அட்டைகள் காணப்படுகின்றன. எனவே கடல் அட்டை அழிந்து வரும் இனம் அல்ல.

2000 ஆம் ஆண்டு முதல் தடை

இந்த நிலையில் அழிந்து வரும் இனப்பட்டியலில் உள்ள 62 கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றாக கடல் அட்டைகளையும் மத்திய வனத்துறை அமைச்சகம் சிந்திக்காமல் திடீர் எனச் சேர்த்தது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு கடல் அட்டைகளை பிடிப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது.

அழிந்து வரும் உயிரினம் அல்ல

மிக அதிக அளவில் காணப்படும் கடல் அட்டைகளை எந்தவித காரணமும் இல்லாமல் அழிந்து வரும் உயிரினம் என்று கருதி

மத்திய அரசு தடை விதித்துள்ளது அர்த்தமற்றது. நியாயமற்றது. பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா உள்பட தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியிலும் ராமேஸ்வேரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம் போன்ற கடற்கரைப் பகுதிகளிலிலும் கடல் அட்டைகள் ஏராளமாக வாழ்கின்றன.

தமிழக மீனவர் மீது வீண்பழி

இதனால், மீனவர் வலைகளில் மீன்களோடு சேர்ந்து கடல் அட்டைகளும் அதிக அளவில் பிடிபட்டு வருகின்றன. ஆனால் வேண்டுமென்றே கடல் அட்டைகளை பிடிப்பதாக வீண்பழி சுமத்தப்பட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் நடவடிக்கையாக உள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.

அண்டை நாடுகளில் தடை இல்லை

நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், பங்ளாதேஷ், சீனா ஆகிய நாடுகளில் கடல் அட்டைகள் பிடிப்பதற்கு எவ்வித தடையுமில்லை. மேலும் சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு மற்றும் இந்தியாவின் மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி மையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் கடல் அட்டைகள் அழிந்து வரும் கடல்வாழ் உயிரினம் அல்ல என்று உறுதிபட அறிவித்துள்ளன.

மருத்துவமாக கடல் அட்டைகள்

கடல் அட்டைகள் அதிக அளவில் பிடிபடும் போது அவற்றை விஞ்ஞான ரீதியில் எப்படிக் காப்பது என்று மட்டுமே அறிவுறுத்தியுள்ளனர். மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கடல் அட்டைகள் மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக் கடல் பகுதியில் இனப்பெருக்கம் அதிகம்

கடல் அட்டைகள் இனப்பெருக்கம் தமிழக கடல் பகுதியில் பெருமளவு உள்ளன. மீன்பிடிக்கும் போது மீனவர்கள் தங்கள் வலைகளில் மீன்களோடு சேர்ந்து கடல் அட்டைகளும்

பிடிபட்டால் கரை வந்ததும் கடல் அட்டைகளை பிரித்து மீண்டும் கடலில் விட்டு விடுவர்.

சில சமயம் குவித்து வைக்கப்பட்ட கடல் அட்டைகளில் ஒரு பகுதியை ஒரு ஏழைகள் சிலர் கவர்ந்து சென்று சமயம் பார்த்து வியாபார நோக்கில் ஈடுபடுவர். அவர்கள் பிடிபடும் போது கடல் அட்டைகள் வைத்திருந்த குற்றத்திற்காக கிரிமினல் குற்றவாளிகள் போல தண்டிக்கப்படுவதும் உண்டு.

அப்பாவி மீனவர்கள் மீதான துஷ்பிரயோகம்

கடல் அட்டைகள் கடத்துவோர் தண்டிக்கப்படலாம், ஆனால் தங்கள் வலையில் மீன்களோடு சேர்ந்து தானாக கடல் அட்டைகள் பிடிபடுவதை தவிர்க்க முடியாத போது, கடல் அட்டைகள் பிடித்த குற்றத்திற்காக அப்பாவி மீனவர்களை கைது செய்து தண்டிப்பது வனத்துறை அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மீனவர் இனத்திற்கு இழைக்கும் அநீதியாகும்.

சட்டரீதியான தடையை நீக்க வேண்டும்

இதற்கு ஒரே தீர்வு அழியும் கடல்வாழ் உயிரினப் பட்டியலிலிருந்து கடல் அட்டைகளை நீக்கி கடல் அட்டைகள் பிடிப்பதற்குள்ள சட்டரீதியான தடையை நீக்குவதே ஆகும். தமிழக மீனவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்