கடற்படை ரகசியங்கள் கசிவு வழக்கு: முன்னாள் கேப்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல்

0
0

இந்திய கடற்படை ரகசியங்கள் கசிந்தது தொடர்பான வழக்கில், அதன் முன்னாள் கேப்டன் சலம் சிங் ரத்தோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய கடற்படையின் போர் உத்திகள், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டப் பணிகள் உள்ளிட்டவை அடங்கிய 7000 பக்கங்களைக் கொண்ட ரகசிய ஆவணங்கள் சில தனி நபர்களுக்கு கசியவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கடந்த 2005-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, கடற்படையில் கேப்டனாக பணியாற்றிய சலம் சிங் ரத்தோர் உட்பட பல அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில், சலம் சிங் ரத்தோரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இந்திய கடற்படை மட்டுமின்றி ஒட்டுமொத்த ராணுவம் தொடர்பான 17 ரகசிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகையையும் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதங்கள், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. அப்போது, கடற்படை முன்னாள் கேப்டன் சலம் சிங் ரத்தோரை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே. அகர்வால் நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கில் கடற்படை முன்னாள் கேப்டன் சலம் சிங் ரத்தோர், தேசவிரோதக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நம் நாட்டின் எதிரிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படக் கூடியவை ஆகும். நாட்டின் பாதுகாப்பையே அடகு வைக்க துணிந்த காரணத்தால், முன்னாள் கேப்டன் சலம் சிங் ரத்தோருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.