கச்சநத்தம் படுகொலை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம்: வெறிச்சோடிய அரசுப் பள்ளி

0
1

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினரை தாக்கியதில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்பின் அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதனால் அப்பள்ளி மாணவர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கருப்பணசாமி கோயில் திருவிழாவில் மரியாதை பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பிரிவினரை, மற்றொரு பிரிவினரை சேர்ந்த 16க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களால் தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக பழையனூர் போலீஸார் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் மற்றும் அவரது மகன்கள் சுமன், அருண் உள்பட 16 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மற்றொரு பிரிவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த கல்வியாண்டு வரை 18 மாணவர்கள் படித்தனர். அதில் 7 மாணவர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஆறாம் வகுப்பிற்கு வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் நடப்பு கல்வியாண்டில் 11 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் உள்பட 11 பேர் படித்துள்ளனர். ஆவரங்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த 10 மாணவர்களும் இங்கு படித்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் நடந்ததற்குப்பின் தமது குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவதில் கச்சநத்தம், ஆவரங்காடு மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே கச்சநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு அனுப்பாமல் வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனால் மாணவர்களின்றி அரசுப் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது. பள்ளிக்கு தலைமை ஆசிரியர் அலெக்ஸ், மற்றொரு ஆசிரியர் மணிகண்டன் மட்டும் தினமும் வந்து செல்கின்றனர்.

கச்சநத்தம் அரசு தொடக்கப்பள்ளி, மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

 

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்தாண்டு 11 மாணவர்கள் இருந்தனர். ஆரம்பத்தில் 4 மாணவர்கள் வெளியில் சென்று சேர்ந்துவிட்டனர். தற்போது பள்ளியில் 7 மாணவர்களின் பதிவு மட்டும் உள்ளது. கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 6 மாணவர் உள்பட 7 பேரும் பள்ளிக்கு வரவில்லை என்றார்.