ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: டெல்டாவுக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

0
0

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலை யில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 50ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 1 லட்சம் கனஅடியை கடந்துள்ளதால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்பியதை அடுத்து, விநாடிக்கு 1.43 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப் பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8,311 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 16,969 கனஅடியாக அதிகரித்து. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 117.32 அடியாகவும், நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடி யாகவும் உள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. அணையில் 89.26 டிஎம்சி நீர் உள்ளது. காவிரியில் பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ளத்தால், நாளை இரவுக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் ஆட்சியர் ரோஹிணி கூறும்போது, ‘காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டு பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்ஃபி உள்ளிட்ட எந்த வகையிலான படமும் ஆற்றில் இறங்கி எடுக்கக்கூடாது. 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் அபாயகரமான இடங்களில் கண்காணிப்புக் குழு அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மதியம் 1 மணியளவில் 80 ஆயிரம் கனஅடியை தொட்டது. பின்னர் மாலை 4 மணி நிலவரப்படி இது மேலும் உயர்ந்து 1 லட்சம் கனஅடியைக் கடந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை களையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக் கிறது. பிரதான அருவி பகுதியில் நுரை ததும்பியபடி வெள்ளம் சீறிப்பாய்கிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாத நிலையில் பரிசல் இயக்குவோர், எண்ணெய் மசாஜ் செய்வோர், சமையல் பெண்கள் உள்ளிட்டோர் வேலை இழந்துள்ளனர்.