ஐஜி பொன்மாணிக்கவேல் மீது அதிருப்தி: சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கும் அரசாணை வெளியீடு

0
0

ஐஜி பொன்மாணிக்கவேலின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என உயர்நீதிமன்றத்தில் சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்கபோவதாக அறிவித்த முடிவின் அடிப்படையில் சிபிஐ வசம் ஒப்படைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சிலைகடத்தல் சம்பந்தமாக ஐஜி பொன்மாணிக்கவேல் அதிரடியாக செயல்பட்டு பல வழக்குகளில் தீர்வு கண்டு கைது நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் அறநிலைத்துறையில் பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொன் மாணிக்கவேலை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவை அவரே கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது சம்பந்தமான வழக்கும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவு குறித்த வழக்குகளும், சிலைகளை வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம்கள் அமைப்பதற்கான வழக்கும் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தால் இந்த பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு விசாரணை அறிக்கைக் கூட வழங்கவில்லை.

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சிலைகடத்தல் வழக்கை பொன் மாணிக்கவேல் திறம்பட கையாண்டு வருகிறார், அதில் சில விஐபிக்கள் சிக்க உள்ளனர் அவர்களை காப்பாற்றவே சிபிஐ வசம் ஒப்படைக்க முயற்சிக்கிறது தமிழக அரசு என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி வர உள்ள நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

அந்த அரசாணையில், சிலை கடத்தல் தொடர்பாக சிறப்பு பிரிவு விசாரித்து வரும் வழக்குகளையும், சிலை கடத்தல் தொடர்பான எதிர்கால வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி பரிந்துரை அளித்துள்ளார்.

இந்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியும் ஒப்புதல் அளித்துள்ளார். மேற்கண்ட பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்த பிறகு அதை ஏற்றுக்கொள்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஏற்கஎனவே உயர்நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இதுதொடர்பான தகவல் தொடர்புகள் மற்றும் உத்தரவுகளை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான நிலுவையில் உள்ள மற்றும் எதிர்கால வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு இசைவளிக்கிறது, இதற்கேற்ப, அனைத்து சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாகவும் தமிழகத்தில் எப்பகுதியிலும் விசாரணை நடத்தும் அதிகாரத்தை சிபிஐ-க்கு வழங்க தமிழக அரசு இசைவளிக்கிறது என்றஅறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.