ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்: ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி ‘போராளி’ கோலி சச்சினுக்குப் பிறகு சாதனை

0
0

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கடந்த 32 மாதங்களாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கீழே தள்ளி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் முதலிடத்துக்குப் பின், டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடம் பெறுவது கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், சச்சின், ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், சேவாக், திலிப் வெங்சர்கர் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில்ல முதலிடத்தைப் பெற்று இருந்தாலும், தரவரிசையில் மிக அதிகபட்சமாக 934 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் என் மொத்தம் 200 ரன்கள் சேர்த்ததன் மூலம் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இதுவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு 32 மாதங்களாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். அதைக் கோலி முறியடித்து, 934 புள்ளிகளுடன் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

விராட் கோலி

 

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் 5 புள்ளிகள் கூடுதலாக விராட் கோலி உள்ளார். இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் இருக்கும் நிலையில், அதில் சிறப்பாக கோலி விளையாடும் பட்சத்தில் தரவரிசையில் இன்னும் முன்னே செல்ல முடியும்.

தற்போது கோலிக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையே 5 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. ஆனால், பந்தைச் சேதப்படுத்திய குற்றத்தில் ஒரு ஆண்டு தடையில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தரவரிசையில் டான் பிராட் மேனின் 961 புள்ளிகள் சாதனையை இதுவரை எந்த ஒருவீரரும் எட்டவில்லை. அதேசமயம், 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் 947 புள்ளிகளை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 13 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுவதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எட்டுவார் என நம்பலாம்.

அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன், தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ், டீ வில்லியர்ஸ் ஆகியோர் அதிகபட்சமாக 935 புள்ளிகள் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெற்றுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அதை முறியடிப்பார்.

மேலும் தரவரிசையில் இந்திய வீரர் லோக்கேஷ் ராகுல் ஒரு இடம் சரிந்து 19-வது இடத்திலும், ரஹானே 2 இடங்கள் சரிந்து 22-ம் இடத்திலும் உள்ளனர். முரளிவிஜய், ஷிகர் தவண் இருவரும் 25-வது இடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 12-வது இடத்திலும், அலிஸ்டார் குக் 4 இடங்கள் சரிந்து 17-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை அஸ்வின்(825) 14 புள்ளிகள் பெற்று, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டரை(826) எட்டுவதற்கு இன்னும் ஒரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது.

இசாந்த் சர்மா 19 புள்ளிகள் பெற்று 26-வது இடத்தில் உள்ளார். புனேஷ்வர் குமார் 25-வது இடத்திலும், முகமது ஷமி 19-வது இடத்துக்கும் உள்ளனர்.