ஏழுமலையானின் ஆபரண விவரங்களை ‘ஆன்லைன்’ மூலம் தெரிவிக்க வேண்டும்: எம்.எல்.ஏ. ரோஜா வலியுறுத்தல்

0
0

திருப்பதி ஏழுமலையானின் ஆபரண விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் தெரிவிக்க வேண்டும் என்று நகரித் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஜா வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை எம்எல்ஏ ரோஜா நேற்று காலை தரிசனம் செய்தார். அதன் பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையானின் நகைகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேவஸ்தானத்தின் கடமை. ஆதலால், ஏழுமலையானின் ஆபரண விவரங்களை ஆன்லைன் மூலம் அறிவிக்க வேண்டும்.

பணியில் சேர்ந்த புதிதில், தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரியான ஸ்ரீநிவாச ராஜு, ஏழுமலையானின் நகைகள் குறித்த விவரங்களை ஆன்லைனில் தெரிவிப்போம் எனக் கூறினார். அவர் சேர்ந்து தற்போது 8 ஆண்டுகள் ஆகியும் அது நடக்கவில்லை.

மஹா சம்ப்ரோக்‌ஷணத்தின் போது பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என தீர்மானம் செய்தவர்களை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சிதரை பணியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது.

அடுத்த முறை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பதவி நீக்கம் செய்யப்பட்ட அர்ச்சகர்கள் அனைவருக்கும் மீண்டும் அதே பதவி வழங்கப்படும். இவ்வாறு ரோஜா கூறினார்.