எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணவர் ஜி.பூபதி ராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவரான இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன் னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருந்தார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னையில் தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்க அவர், தனது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன், மாமா கணேசனை அழைத்துக்கொண்டு அன்றைய தினம் அதிகாலை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப் போது மர்மநபர்கள் பூபதிராஜாவின் சான்றிதழ்கள் இருந்த பையைத் திருடிச் சென்றனர்.

அந்தப்பையில் தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான சான்று மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ் உள்ளி்ட்டவை பறிபோனதால் இதுகுறித்து போலீஸாரிடம் முறை யி்ட்டு பூபதிராஜா அழுதுள்ளார்.

இந்த விவரத்தை கலந்தாய்வில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் பூபதிராஜாவை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து இந்த விவரம் நேற்று மாலை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘‘ஏழை மாணவரான பூபதிராஜாவை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவி்க்கவும் உத்தரவிட்டார்.