எப்படி இருக்கு மிஸ்டர் சந்திரமௌலி? – நியூஸ்7 பேப்பர் தமிழ் விமர்சனம் | Mr.Chandramouli movie review

0
0

Rating:

3.0/5

Star Cast: கௌதம் கார்த்திக், கார்த்திக் முத்துராம், ரெஜினா கேஸ்சன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், விஜி சந்திரசேகர்

Director: திரு

சென்னை: திரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் மிஸ்டர் சந்திரமெளலி.. என்ன ஓய்.. மெளன ராகம் ஞாபகம் வருதா.. வராதா பின்னே.. அப்படி ஒரு முத்திரையாச்சே.. அந்தப் பெயரை பயன்படுத்தி ஒரு படம். அதுவும் அந்த பெயரை பிரபலமாக்கியவரின் மகனே ஹீரோவும் கூட. எப்படி வந்திருக்க வேண்டும். வந்திருக்கிறதா?.. வாருங்கள் பார்ப்போம்.

இரண்டு கால் டாக்ஸி கம்பெனிகளுக்கு இடையே ஏற்படும் வியாபாரப் போட்டியை, அப்பா, மகன் பாசம், காதல், பாக்ஸிங் என விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. ரியல் அப்பா – மகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் ஜோடி, படத்திலும் அப்பா – மகனாகவே நடித்திருப்பதே படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல், திருப்பங்கள் மிகுந்த காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தாயில்லாத மகன் கவுதமை, அந்தக் குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்குகிறார் கார்த்திக். மகனுக்கு பாக்ஸிங் மீது காதல். அப்பாவுக்கோ அவரது பழைய பத்மினி கார் மீது தீராக்காதல். தன் மனைவியின் நினைவாக அந்தக் காரை வைத்திருப்பதாகக் கூறும் மிஸ்டர் சந்திரமௌலி (கார்த்திக்), அதற்காக செய்யும் அலப்பறைகள் வேற லெவல்.

காதல், காமெடி என முன்பாதி ஆமை வேகத்தில் நகர, திடீரென இடைவேளைக்கு முன் கார்த்திக் (ஸாரி.. அது சஸ்பென்ஸ்)… அதற்குப் பின் படத்தின் வேகம் அப்படியே மாறுகிறது. கண் பார்வை பாதிக்கப்படும் கவுதம், அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ரகசியம், அதன் பின்னணியில் நடக்கும் மர்மங்கள் என சுவாரஸ்யமாக காட்சிகள் நகர்கிறது.

தனது முந்தைய மூன்று படங்களிலும் விஷாலை இயக்கிய திரு, இப்படத்தில் முதன்முறையாக கவுதம் கார்த்திக்கை நாயகனாக்கியிருக்கிறார். ஆனால், பல இடங்களில் சந்திரமௌலி, விஷாலின் நான் சிகப்பு மனிதனை ஞாபகப்படுத்துகிறான் என்பது மறுக்க முடியாது. சராசரியாகச் சென்று கொண்டிருக்கும் நாயகன் வாழ்க்கை, திடீரென ஒரு சம்பவத்தால் மாறுவது, உடல்நலக் குறைபாட்டால் நாயகன் பாதிக்கப்படுவது, எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது, எதிர்பார்க்காத நொடியில் வில்லனின் வேறுமுகம் என அதே நான் சிகப்பு மனிதன் பார்முலா தான் சந்திரமௌலியிலும்.

Mr.Chandramouli movie review

தொடர்ந்து ஏ சர்டிபிகேட் படங்களில் நடித்து ஆபாச நடிகர் எனப் பெயர் வாங்கிய கவுதம் கார்த்தி இந்தப் படத்தில் அடடே என பெயர் வாங்குகிறார். தந்தையின் பாசம், பாக்ஸர், முதல் பார்வையிலேயே காதலில் விழுவது, அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவது என ராகவ் கதாபாத்திரத்தில் நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். நிச்சயம் இப்படம் கவுதமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.

தமிழ்த் திரையுலகம் காலம் காலமாக கையாண்டு வரும் “பார்முலா” ஹீரோயினாக வருகிறார் ரெஜினா. இரண்டு பாடல்களில் கவர்ச்சி விருந்து, அது தவிர படம் முழுவதும் நாயகனுடன் வருவது என ரெஜினாவிற்கு படத்தில் பெரிய வேலையில்லை. அதனால், படத்தின் நாயகி ரெஜினாவை விட, சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு கவர்கிறது. கார்த்திக்கும், அவரும் வரும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. கடைசி வரை இருவருக்கும் இடையில் உள்ள உறவு காதலா, நட்பா என்பதை விரிவாகச் சொல்லாமல் விட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.

அதேபோல், சில காட்சிகளே வந்தாலும் இயக்குநர் மகேந்திரனும், அகத்தியனும் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள். சந்தோஷ், மைம் கோபி வில்லத்தனம் காட்டுகிறார்கள். வழக்கம்போல கதாநாயகனின் நண்பனாக வருகிறார் சதீஷ். ஆனால் கிச்சுமுச்சு காட்டத் தவறி விட்டார்.

சாம் சிஎஸ் இசையில் ஏதேதோ ஆனேனே பாடல் செம ஹிட். அதிலும் அந்த பீச் போட்டோகிராபி, பிகினி என கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். காதல், பாசம், க்ரைம், என எல்லாக்காட்சிகளிலும் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். அதற்கு உறுதுணையாக படத்தை நகர்த்தி செல்கிறது சுரேஷின் படத்தொகுப்பு.

கதை ஒருபுறம் காதல், அப்பா-மகன் பாசம் என நகர, இடையில் ஒரு குறிப்பிட்ட வாடகைக் கார் நிறுவனத்தின் காரில் பயணம் செய்பவர்கள் அவ்வப்போது கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கும், கார்த்திக்கின் மரணத்திற்கும் என்ன தொடர்பு என்பது தான் படத்தின் சுவாரஸ்யம் மிகுந்த முடிச்சு.

Mr.Chandramouli movie review

தன் கண் பார்வைக்குறைபாட்டோடு நாயகனின் துப்பறியும் காட்சிகள் படத்தின் வேகத்தை சூடேற்றுகின்றன. கடைசிக் காட்சிகளில் இது தான் இத்தனை கொலைகளுக்கும் காரணம் என காரணம் கூறினாலும், திரைக்கதை நிச்சயம் பார்வையாளர்களை கொஞ்சம் குழப்பவே செய்கிறது. தொடர்ந்து மாறும் காட்சிகளால், முந்தைய காட்சிகளை மனதில் நிறுத்துவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் என்ற கேள்வி தான் எழுகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்தக் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.