“என் மகன் ஒரு உதவாக்கரை”- மத்திய அமைச்சரை விளாசிய யஸ்வந்த் சின்ஹா

0
0

 இறைச்சி வியாபாரியை தாக்கி கொன்ற வழக்கின் குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கிய தனது மகனும், மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை உதவாக்கரை என்று அவரின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடுமையாகச் சாடியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ராம்கர் பஜார் டண்ட் பகுதியில் ஒரு வாகனத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாக நினைத்து 30 பேர் கொண்ட கும்பல் அதைத் தடுத்து நிறுத்தியது. அந்த வாகனத்தில் இருந்த ஹசாரிபக் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலிமுதீன் அடித்துக் கொலை செய்து வாகனத்துக்கும் தீவைத்துக் கொளுத்தியது.

இதுதொடர்பான வழக்கில் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், உயர் நீதிமன்றம் 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அண்மையில் ரத்து செய்தது.

இந்த 8 பேரும் ஹசாரிபாக்கில் உள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டிற்கு நேற்றுச் சென்றனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜெயந்த் சின்ஹா, இனிப்பு வழங்கினார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், பாஜகவில் இருந்து விலகியவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா தனது மகனின் செயல் குறித்து வேதனையுடன் ட்விட்டரில் கருத்துத்தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இதற்கு முன் “தகுதியான மகனுக்கு”, நான் “உதவாக்கரை தந்தையாக” இருந்தேன். ஆனால், எப்போது,  இறைச்சி வியாபாரியை தாக்கி கொன்ற வழக்கின் குற்றவாளிகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரோ அப்போது என் மகன் “உதவாக்கரை”யாகிவிட்டார். நான் “தகுதியான தந்தையாக” மாறிவிட்டேன்.

என் மகனின் செயலுக்கு ஒருபோதும் நான் ஆதரவு அளிக்கவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் இன்னும் அவர்களைத் தூண்டிவிடும். தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தன்னுடைய செயல்பாடு நியாயமானது என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

விரைவுநீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் சிறை வழங்கியதில் தவறு இருக்கிறது என அடிக்கடி கூறிவந்தேன். இதனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், தீர்ப்பைச் சரிசெய்ய வேண்டும் எனக் கோரி இருந்தேன்.

அதேசமயம், சட்டத்தைக் கையில் எடுத்துநடக்கும் அனைத்து விதமான வன்முறைகளையும் நான் எதிர்க்கிறேன். சட்டத்தின் தீர்ப்பு, ஆட்சியை முதன்மையானது. ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் சட்டவிரோத நடவடிக்கையால் பறிக்கப்படக்கூடாது, சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.