என்ன சதி செய்தாலும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

0
0

என்ன சதி செய்தாலும் அனைத்தையும் முறியடித்து வரும் 2019 தேர்தலில் வென்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுவாமிநாதன் சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ”தூத்துக்குடியில் பயங்கரவாத அமைப்புகள் தங்களை மூளைச் சலவை செய்ததாக மீனவர்களும், பொதுமக்களும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு தமிழக அரசும், திமுகவும் பதில் சொல்லியாக வேண்டும்.

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளது. பயங்கரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.

எத்தனை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தாலும், என்ன சதி செய்தாலும் அனைத்தையும் முறியடித்து வரும் 2019 தேர்தலில் வென்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.