‘‘எங்கள் சமூகத்தை பற்றி பேச வேண்டாம்’’ – ராகுல் காந்திக்கு முஸ்லிம் அறிஞர்கள் அறிவுரை

0
0

முஸ்லிம் சமூகத்தை குறிப்பிட்ட பேச வேண்டாம் எனவும், இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அச்சமூக அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த் 12 அறிஞர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். வரலாற்று அறிஞர் ஹபீப், மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், எழுத்தாளர் ரக்ஷனா ஜலீல், தொழிலதிபர்கள் ஜூனைத் ரஹ்மான், நதீம் ஜாவேத், முஸ்லிம் அறிஞர் மாலிக் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

அப்போது, முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் பிரச்சினைகள், சமூக மாற்றம், அரசியல் நிலவரம் என பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது,  முஸ்லிம் சமூகம் குறித்து குறிப்பிட்டு பேச வேண்டாம் எனவும், அதனால் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்கினர்.

இதுகுறித்து வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் கூறுகையில் ‘‘முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி ராகுல் காந்தி சில விஷயங்களை பேசி வருகிறார். இது அரசியலில் மற்றவர்களுக்கு வாய்ப்பாகி விடுகிறது. இதை வைத்து அரசியல் செய்யும் சிலர் மற்ற சமூகத்தை இணைத்து தலைவர்களாகி விடுகின்றனர். இதன் மூலம் 96 சதவீத முஸ்லிம்களுக்கு பாதிப்பு தான் ஏற்படுகிறது.

எனவே முஸ்லிம் சமூகத்தை பற்றி பேசுவதை விடுத்து வறுமை, கல்வி அறிவு போன்ற விஷயங்களை பற்றி ராகுல் காந்தி பேசலாம். காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 1979களில் அந்த கட்சி எப்படி இருந்தது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். பன்முகத்தன்மையை ஒருங்கிணைத்து பணியாற்றுவதே அக்கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது’’ எனக் கூறினார்.

இதுகுறித்து மாலிக் கூறுகையில் ‘‘தேர்தல் பற்றியோ, தனிநபர் சட்டவாரிய பிரச்சினைகள் குறித்தோ நாங்கள் பேசவில்லை. அதேசமயம் முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய எதிர்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தலைவரை சந்தித்து எங்கள் கருத்துக்களை தெரிவித்தோம். எங்கள் கருத்துக்களை அவர் கனிவுடன் கேட்டார். அவருக்கு ஆலோசனைகளை சொல்வது எங்கள் கடமை’’ எனக்கூறினார்.

சந்திப்பு குறித்து சல்மான் குர்ஷித் கூறுகையில் ‘‘முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து அவர்களது கருத்துக்களை முன் வைத்தனர். இந்த சந்திப்பு காங்கிரஸின் எதிர்கால திட்டமிடலுக்கு உதவியாக அமையும்’’ எனக் கூறினார்.